மாலைதீவிலிருந்து விரட்டியடிக்கப்படும் இந்திய படைகள்!
இந்திய படைகள் எதிர்வரும் மே மாதத்துக்குள் மாலைதீவில் இருந்து வெளியேறும் என அந்த நாட்டு அதிபர் முகம்மது மொய்சு நாடாளுமன்றத்தில் இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சீன ஆதரவாளராக அறியப்படும் முகம்மது மொய்சு, மாலைதீவு அதிபரானதையடுத்து, அந்த நாட்டில் இருக்கும் இந்திய ராணுவத்தை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், இன்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முகம்மது மொய்சு, மாலைத்தீவு விவகாரங்களில் தலையிடவோ, அதன் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ எந்த நாட்டையும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்திய துருப்புகள்
அத்துடன், மாலைதீவின் மூன்று விமான தளங்களில் இந்திய துருப்புகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#WATCH | 'No compromise on sovereignty': #Maldives' #MohamedMuizzu's message to #India amid row over troop presence pic.twitter.com/tXa1haMqLz
— Hindustan Times (@htTweets) February 5, 2024
அவற்றில் ஒரு விமான தளத்தில் உள்ள இந்திய துருப்புகள் மார்ச் 10 ஆம் திகதிக்குள் வெளியேறிவிடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான ஒப்பந்தம் இந்தியா - மாலைதீவு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முகம்மது மொய்சு தெரிவித்துள்ளார்.
கடும் எதிர்ப்பு
முகம்மது மொய்சுவின் இந்த நடவடிக்கைக்கு மாலைதீவின் இரு பெரும் எதிர்க்கட்சிகளான எம்டிபி மற்றும் ஜனநாயகக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அத்துடன், மாலைதீவு அதிபர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, எம்டிபியின் 43 உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் 13 உறுப்பினர்கள் என 56 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
முகம்மது மொய்சு பேசும்போது அவையில் 24 உறுப்பினர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
இது மாலைதீவு நாடாளுமன்ற வரலாற்றில் அதிபரின் உரைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்திய விரோதப் போக்கு
முகம்மது மொய்சுவின் இந்திய விரோதப் போக்கு தவறானது என கூறி வரும் எடிபி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை, அதிபர் முகம்மது மொய்சுவை பதவி நீக்கம் செய்ய முயன்று வருகின்றன.
மாலைதீவில் 87 இந்திய துருப்புகள் உள்ளன. அவை, அந்நாட்டில் மனிதாபிமான உதவிகளையும் மருத்துவ உதவிகளையும் செய்து வருகின்றன.
படைகளை இந்தியா திரும்பப் பெற்றாலும், விமானப்படைத் தளங்களை தொடர்ந்து பயன்படுத்த மாலைதீவு உடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை கூறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |