இலங்கைக்கு வலுவான ஆதரவு ஜெனிவாவில் உறுதியளித்தது சீனா
இலங்கையின் இறையாண்மை, சுயாதீனத்தன்மை, சமுக உறுதிப்பாடு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய விடயங்களில் இலங்கைக்கு வலுவான ஆதரவை வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. இந்த கூட்டத் தொடரில் உரையாற்றிய சீன பிரதிநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் முயற்சிக்கு பாராட்டு
நல்லிணக்கம், மீளக்கட்டியெழுப்பல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நலிவடைந்த நிலையிலுள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், பொருளாதார மீட்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல் என்பன உள்ளடங்கலாக மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலை முன்னிறுத்தி இலங்கை மேற்கொண்டுவரும் முயற்சிகளை பாராட்டுகின்றோம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானமானது நியாயத்துவம் மற்றும் பக்கச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு அமையவில்லை என்பதுடன், சம்பந்தப்பட்ட நாட்டின் அனுமதியையும் பெறவில்லை.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை
அதுமாத்திரமன்றி இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவற்றை மேம்படுத்துவதிலும் இத்தீர்மானம் நேர்மறையானதொரு வகிபாகத்தைக் கொண்டிருக்கவில்லை.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது நாடுகளின் இறையாண்மை மற்றும் அரசியல் சுயாதீனத்தன்மை ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்றும், மனித உரிமைகளின் மேம்பாட்டுக்காக அந்நாடுகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை அங்கீகரிக்கவேண்டும் என்றும் கருதுகின்றோம்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.