சீன கண்காணிப்பு கப்பலால் வலுக்கும் எதிர்ப்பு..! இறுதி முடிவை அறிவித்தது இலங்கை அரசு
யுவான் வாங் 5
சீனாவின் ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 கப்பலுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவின் ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 எதிர்வரும் 11ம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது பிராந்தியத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்த கப்பல் செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை கண்காணிப்பு திறன்களைக் கொண்டிருப்பதால் சீனக் கப்பலுக்கு இலங்கையில் தரித்து நிற்க அனுமதி வழங்கப்படுவதற்கு இந்தியா கடும் கவலைகளையும் எதிர்ப்பையும் வெளியிட்டது.
இராஜதந்திர முரண்பாடு
சீனக் கப்பல் தொடர்பான இராஜதந்திர முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக சிறிலங்கா அதிபருக்கும் இலங்கையில் உள்ள இந்திய மற்றும் சீனத் தூதுவர்களுக்கும் இடையில் பல உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்போடியாவில் நடைபெறவுள்ள ஆசியான் உச்சி மாநாட்டையொட்டி, சீனக் கப்பல் தொடர்பான பிரச்சினை குறித்து இந்திய மற்றும் சீன சகாக்களுடன் கலந்துரையாடுமாறும் அதிபர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், வெளியுறவு அமைச்சரின் முயற்சிகள் இருந்தபோதிலும், பிரச்சினை தீர்க்கப்படவில்லை, கப்பலுக்கான பாதையை மாற்றுவது குறித்து பரிசீலிக்க சீனத் தலைவர்கள் உடன்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சந்திப்பின் முடிவுகளை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்தபோது, யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்வதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.
சீனத் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு
இது குறித்து கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், கொழும்பில் உள்ள சீனத் தூதுவர், அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனக் கப்பலுக்கான அனுமதியை இரத்துச் செய்யும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து சீனத் தூதுவர் சீனாவின் கவலையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.