சீனாவின் மற்றுமொரு சாதனை : நிலவுக்குச் செல்லும் வீரரின் உடை அறிமுகம்
விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுவரும் சீனா (China) தற்போது நிலவுக்கு செல்லும் மனிதன் அணியும் உடையை சீன விண்வெளி மையம் அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன விண்வெளி மையம் அறிமுகப்படுத்திய இந்த உடைக்கு “வாங் யு ” (Wangyu) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நிலவில் மனிதன் அமர்ந்து செல்லும் வாகனமும் (ரோவர்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு “டான்சுவோ” (Tansuo) என்று பெயரிடப்பட்டுள்ளதாக சீன விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
உடை மற்றும் ரோவர்
பாலைவனத்தில் நிலவை போன்ற தன்மையை செயற்கையாக உருவாக்கி அங்கு இவ்வாகனம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது விண்வெளி உடை மற்றும் ரோவரின் முன்மாதிரிகள் வடிவமைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆராய்ச்சி பணிகள் சீராக நடைபெற்று வருவதாகவும், நிலவில் தரையிறங்கும் வீரரின் உடைகள் கச்சிதமாகவும், இலகுவாகவும் இருப்பதோடு நிலவின் மேற்பரப்பில் கடுமையான சூழலைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும் எனச் சீன விண்வெளி மையத்தின் ஆராய்ச்சியாளரான ஜாங் வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சீனா 2030ஆம் ஆண்டில் சீனர் ஒருவரை நிலவுக்கு அனுப்பி அங்கு மனித வாழ்க்கைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)