அடுத்தடுத்து இலங்கை விரையும் முக்கியஸ்தர்கள்
உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு தென்கொரிய சபாநாயகர் பான் பியோன் சேக் (Park Byeong-Seug) நாட்டை வந்தடைந்துள்ளார்.
சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் மூலம் தென்கொரிய சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழு நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளதாக நாமல் ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவின் அழைப்புக்கு அமைய, தென்கொரிய சபாநாயகர் பான் பியோன் சேக் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இதன்போது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தென்கொரிய சபாநாயகர், இலங்கை நாடாளுமன்றத்திற்கும் செல்லவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைந்த தென்கொரிய சபாநாயகரை, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் ஷானக்க ஆகியோர் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர், மாலைதீவின் சபாநாயகர் மற்றும் பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஆகியோர் வந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.