சீனாவை ஆத்திரமூட்டும் வகையிலான உலக நாடுகளின் நகர்வுகள் - தாய்வானை சூழ பாரிய நடவடிக்கை!
சீன இராணுவத்தின் நேரடி துப்பாக்கி சூட்டு பயிற்சிகள் முடிவடைந்த நிலையில், தாய்வனை சூழ பாரிய அளவான இராணுவப் பயிற்சிகள் தொடர்வதாக சீன இராணுவம் அறிவித்துள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கி சூட்டு பயிற்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு தாக்குதல் மற்றும் கடல் வழித் தாக்குதல் பயிற்சிகளை மேற்கொள்ளப் போவதாக சீன இராணுவத்தின் கிழக்கு கட்டளை மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அண்மையில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோசியின் தாய்வான் விஜயத்தை தொடர்ந்து நான்கு நாள் பயிற்சிகளை சீனா மேற்கொண்டிருந்தது.
தாய்வான் மீது படையெடுப்பிற்கான ஒத்திகை
இந்நிலையில், தமது நாட்டின் மீதான படையெடுப்புக்கான ஒத்திகையாக இந்தப் பயிற்சிகளை சீனா பயன்படுத்துவதாக தாய்வான் குற்றஞ்சாட்டியுள்ளது.
இருப்பினும் சீனாவின் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் இதுவரை தமது நாட்டு கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கவில்லை என தாய்வான் கூறியுள்ளது.
சீனாவின் இந்தப் பயிற்சி நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவுடன் இணைந்து அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.
தாய்வான் நீரிணை பகுதியின் நிலையை மாற்றுவதை இலக்காக கொண்டு சீனா இந்தப் பயிற்சிகளை மேற்கொள்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை இடைநிறுத்துவதாக அறிவித்த சீனா
ஏற்கனவே நான்ஸி பெலொஸியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காலநிலை மாற்றம் உட்பட பல துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை இடைநிறுத்துவதாக சீனா அறிவித்திருந்தது.
சீனாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா கண்டித்துள்ளது. தமது நாட்டில் இருந்து பிரிந்து சென்ற மாகாணமாக சீனா தாய்வானை கருதுகின்ற போதிலும், தம்மை சீனாவில் இருந்து வேறுபட்ட ஒரு நிலப்பரப்பாகவே சுயாட்சி கொண்ட தாய்வான் கருதுகின்றது.
இதனை அங்கீகரிக்கும் வகையில் உலக நாடுகளின் தலைவர்கள் மேற்கொள்ளும் நகர்வுகள் சீனாவை ஆத்திரமூட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.