இலங்கைக்கு சீனா அளித்த உறுதிமொழி
இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் கொவிட் தொற்றுநோய் சவால்களிலிருந்து மீண்டெழ தன்னாலான முழு ஒத்துழைப்பையும் வழங்குமென சீனா, கொழும்புக்கு உறுதியளித்துள்ளது.
சீன சபாநாயகர் லி ஸன்ஷு, சிறிலங்கா சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் கடந்த செவ்வாய்க்கிழமை (31) ஜூம் தொழில்நுட்பம் ஊடாக நடத்திய சந்திப்பில் இந்த உறுதிமொழியை அளித்தார் எனஇலங்கை நாடாளுமன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, இரு நாடாளுமன்றங்களின் "உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு இடையே நடந்த முதல் இராஜதந்திர சந்திப்பில்" சீனாவின் ஆதரவை ஸன்ஷு, அபேவர்த்தனவுக்கு அளித்தார்.
நாடு பொருளாதார மற்றும் பொது சுகாதார துறைகளில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ள போராடி வரும் நிலையில் சீனாவின் உத்தரவாதம் வந்துள்ளது.
சீனா மற்றும் இலங்கை நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு இடையேயான சந்திப்பில் சீன துணை சபாநாயகர் வு வெய்ஹுவா, நிதி அமைச்சர் லியு குன் உட்பட சீனாவின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் சீன நாடாளுமன்றத்தால் நடத்தப்பட்ட முதல் இராஜதந்திர கலந்துரையாடல் இதுவாகும்.