சூடுபிடிக்கும் சீனக்கப்பல் விவகாரம்..! தயார் நிலையில் இந்தியா: ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா
இந்தியா தயார்
சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற உளவு கப்பலை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது என இந்தியாவின் முன்னாள் ராணுவ மேஜர் மதன்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை கண்காணிக்கவே சீனாவின் உளவு கப்பல் இலங்கையின் தென் பகுதியில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளதாகவும் இந்த கப்பலை எதிர்கொள்ள இந்தியாவும் முழு தகுதியுடன் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கேற்றால் போல் இந்தியாவின் கரையோரப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டமையும் உலங்குவானுர்த்திகள், கடற்படை என்பன அதியுச்ச பாதுகாப்பில் ஈடுபடுகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.
மேலும், சிறிலங்காவிற்கு இந்தியா அளித்த உளவு விமானமும் இந்தியப் பாதுகாப்பின் ஒரு பகுதியாகவே நோக்கப்படுகின்றது.
வான்வெளி யுத்தம் - மின்னணு யுத்தம்
நவீன உலகில் வான்வெளி யுத்தம் அதிகமாகி உள்ளது. அதேபோல, 'சைபர் தாக்குதல் ' மற்றும் மின்னணு கருவிகளால் தொடுக்கப்படும் யுத்தம் என்பனவும் அதிகரித்துள்ளது.
இவ்வாறான தாக்குதல்கள் எதையும் எதிர்கொள்ளும் அளவுக்கு, 'யுவான் வாங் 5' கப்பலில் நவீன தொழில்நுட்ப கருவிகள் உள்ளதால், கடற்படையின் பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது.
வல்லரசு நாடான சீனா, 'பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி' என்ற கடற்படையை அமைத்துள்ளது. ' அதில் ஸ்ட்ரேட்டஜிக் சப்போர்ட் போர்ஸ்' என்ற ஒரு பிரிவு உண்டு ஏராளமான போர் கப்பல்கள் உள்ளன. அவற்றில் மிக நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டது தான், 'யுவான் வாங்- 5' ரக கப்பல்.
உளவு பணிக்காக உருவான இந்த கப்பல், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது. அத்துடன் பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை துல்லியமாக கண்காணிக்கும் திறன் படைத்தது.
இது, சீனாவின் மூன்றாவது தலைமுறை கண்டுபிடிப்பாக கொண்டாடப்படுகிறது.
யுவான் வாங் 5 - ஐ.என்.எஸ். துருவ்
சீனாவின் 'யுவான் வாங் 5' கப்பலை போன்று இந்தியாவிடம், 'ஐ.என்.எஸ்., துருவ்' எனும் மிகப்பெரிய உளவுக்கப்பல் உள்ளது.
இந்தியாவை நோக்கி வரும் ஏவுகணைகளை முன்கூட்டியே கண்காணித்து போர் கப்பல்களை எச்சரிக்கும் திறனை இக் கப்பல் கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்திய வான்பரப்பில் உள்ள செயற்கைக்கோள்கள், இந்தியாவை நோக்கி நடக்கும் வான் கண்காணிப்புகளை கண்டறிந்து இந்திய விண்வெளித்துறையையும் பாதுகாப்பு ஆராய்ச்சித்துறையையும் எச்சரிக்கும் வகையில் துருவ் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 'யுவான் வாங் 5' கப்பல், சீன தலைநகர் பீஜிங்கில் இருக்கும் தலைமை கடற்படை மையத்துக்கு, தான் சேகரிக்கும் அனைத்து உளவு தகவல்களையும் உடனுக்குடன் அனுப்பி வைக்கும்.
மேலும், 750 கி.மீ., சுற்றளவில் உள்ள எந்த பொருளையும் துல்லியமாக படம் பிடிக்கும் வல்லமை கொண்டது எனவும் தெரிவிக்கபடுகின்றது.
'யுவான் வாங் 5' கப்பலில் இருந்து 'லான் மார்ச் -5' என்ற ஏவுகணையை ஏவ முடியும் எனவும் ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் சீனாவின் யுவான் வாங் 5 கப்பலின் அத்தனை சிறப்பம்சங்களையும் இந்தியாவின் துருவ் கப்பல் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் எனவும் மேற்குலக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா
இதற்கிடையில் நேற்று, அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்குவதாகவும், அமெரிக்க செய்மதிகள் இலங்கையை நோக்கி திருப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகியது.
சீனாவின் உளவு கப்பல் அதி நவீன தொழில்நுட்பங்கள் கொண்டதால் தான் இருக்கும் இடத்தில் இருந்து 750 கி.மீ வரை துல்லியமாக ஆய்வு செய்யும் திறன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது, இந்தியாவின் அணுமின்நிலையம் உட்பட செய்மதி ஏவுதளமான ஸ்ரீ ஹரிகோட்டா வரை பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டது.
இதன் காரணமாக, சிறிலங்காவில் கப்பல் நிற்கும் காலப்பகுதில் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது என்பது குறித்து கண்காணிக்க உயர் தொழில்நுட்ப கருவிகளை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
இந்த சாதனங்கள் என்ன என்பதை அமெரிக்கா வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆக இந்திய சீனா மற்றும் அமெரிக்காவின் புவிசார் அரசியல் போட்டியில் இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது என்பது வெளிப்படையாகின்றது.
தொடர்புடைய செய்தி
சிறிலங்காவிற்குள் நுழையும் அமெரிக்க இராணுவ செயற்கைகோள்..! இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா |
சீனாவின் உளவுக்கப்பலுக்கு சவால் விடும் இந்தியாவின் துருவ் கப்பல்..! |