சீனாவின் உளவுக்கப்பலுக்கு சவால் விடும் இந்தியாவின் துருவ் கப்பல்..!
கப்பல்களின் மூளை
சீனாவின் உளவுக் கப்பல் இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குறித்த கப்பலை எதிர்க்கும் வல்லமை இந்தியாவிடம் உள்ளதா என்ற கேள்வி அதிகரித்து வருகின்றது.
சீனாவிடம் உள்ள உளவுக் கப்பல்களுக்குள் மிக பிரமாண்டமானதும் அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை கொண்டதுமான "யுவான் வாங் 5" போர் கப்பல்களின் மூளை என்று வர்ணிக்கப்படுகின்றது.
குறித்த கப்பல் "செயற்கைக்கோள் உளவு மற்றும் ஆய்வுக் கப்பல்" என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் ஏவுகணையை ஏவும் வசதியையும் கொண்டுள்ளது.
சீன உளவுக் கப்பலை எதிர்க்கும் வல்லமை கொண்ட இந்தியா
இத்தகைய அதிநவீன அம்சங்கள் கொண்ட சீன உளவுக் கப்பலை எதிர்க்கும் வல்லமை கொண்ட கப்பல் இந்தியாவிடம் உள்ளதா என உலக நடுகள் இந்தியாவின் பக்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
இந்நிலையில் இந்தியாவின் துருவ் கப்பல் சீன உளவுக் கப்பலை எதிர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளது என வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவை நோக்கி வரும் ஏவுகணைகளை முன்கூட்டியே கண்காணித்து போர் கப்பல்களை எச்சரிக்கும் திறனை இக் கப்பல் கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்திய வான்பரப்பில் உள்ள செயற்கைக்கோள்கள், இந்தியாவை நோக்கி நடக்கும் வான் கண்காணிப்புகளை கண்டறிந்து இந்திய விண்வெளித்துறையையும் பாதுகாப்பு ஆராய்ச்சித்துறையையும் எச்சரிக்கும் வகையில் துருவ் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆக, சீனாவின் உளவுக்கப்பாலான யுவான் வாங் 5ற்கு இந்தியாவின் துருவ் கப்பல் சவாலாக அமையும் என்பது வெளிப்படையாகின்றது.
சீனா யுவான் வாங் - 5
கடல்சார் வான்பரப்பை கண்காணிக்கும் கப்பல்களுக்கு சீனா யுவான் வாங் என்று பெயர் சூட்டியிருக்கிறது.
அந்த வகையில் யுவான் வாங் ரகத்தில் நான்கு கப்பல்களை சீனா வைத்துள்ளது.
யுவான்வாங் 3, யுவான்வாங் 5, யுவான்வாங் 6, யுவான்வாங் 7 என அந்த கப்பல்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கப்பலிலும் வெவ்வேறு செயற்கைக்கோள் கண்காணிப்பு கருவிகள் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் "யுவான்வாங் 5" கப்பலானது 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் உடையது எனவும் சீனாவின் உளவு கப்பல்களுக்குள் மிகவும் பிரமாண்டமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உலக அளவில், சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் மட்டுமே இதுபோன்ற செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் விண்வெளி ஆய்வுக்கப்பல்கள் உள்ளன.
சீனாவிடம் 7 கப்பல்களே உள்ள நிலையில் அமெரிக்காவிடம் இதுபோல 23 கப்பல்கள் உள்ளன எனவும் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
25 ஆயிரம் டன் பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த கப்பலால் அதிகபட்சமாக மணிக்கு 37 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லமுடியும்.
பல கப்பல்களில் இடம்பெற்ற வடிவங்களை ஒருசேர தன்னுள் கொண்டதாக இந்தக் கப்பல் இருக்கிறது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
யுவான் வாங் 5 இன் சிறப்பும் - இந்தியாவின் அச்சமும்
அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்ட குறித்த கப்பல் மூலம் தென் இந்தியாவில் உள்ள 6 கடற்படை தளங்களை இந்த உளவு கப்பலால் படம் பிடிக்க முடியும் எனவும் அங்கு என்ன வசதிகள் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய 2 இடத்திலும் சக்திவாய்ந்த அணுமின் நிலையங்கள் உள்ளன.
இந்த அணுமின் நிலையங்களையும் உளவு கப்பலால் பார்க்க முடியும் எனவும் சென்னைக்கு அருகே இருக்கும் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பணிகளையும் அந்த கப்பலால் ஆய்வு செய்ய முடியும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல்கள் தவிர விசாகப்பட்டினம் மற்றும் கொச்சியில் உள்ள கடற்படை தளங்களையும் கப்பல் துல்லியமாக தெரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் இந்த உளவு தகவல்கள் உடனுக்குடன் சீன இராணுவத்துக்கு அனுப்பப்படும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனா சமீபத்திய மாதங்களிலோ வாரங்களிலோ செய்மதிகளை விண்வெளிக்கு செலுத்தாத நிலையில், இந்த யுவான்வாங் 5 கப்பல் எந்த நோக்கத்துக்காக பெருங்கடல் பயணத்தை மேற்கொண்டுள்ளது என்பதை சீனா விளக்கவில்லை என்பதால் இந்தியாவின் அச்ச நிலை தொடர்ந்து வருகின்றது.
இந்தியா ஐ.என்.எஸ் துருவ்
சீனாவிடம் யுவான்வாங் தொடர்களில் பல வகை கப்பல்கள் இருந்தாலும், இந்தியாவில் அதன் பாதுகாப்பு தேவைக்காக செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்ட ஒரே கப்பலாக 'ஐ என் எஸ் துருவ்' உள்ளது.
விசாகப்பட்டினத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பல், இந்திய கடற்படை சேவைக்காக இயக்கப்படுகிறது. அங்குதான் இதன் இயங்குதளமும் கட்டுப்பாட்டு மையமும் உள்ளது.
இந்த கப்பலை இந்திய கடற்படை சிறப்பு கட்டுப்பாட்டு பிரிவு இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த கப்பலில் அதிநவீன கண்காணிப்பு சாதனங்கள் உள்ளன. இது பல்வேறு அலைவரிசைகளை ஆய்வு செய்யவும், இந்தியாவை கண்காணிக்கும் உளவு செயற்கைக்கோள்களை கண்காணிக்கவும் இந்தியாவின் கடல் பிராந்தியத்தில் நடத்தப்படும் ஏவுகணை சோதனைகளை கண்காணிக்கவும் உதவுகிறது எனவும் தெரிவிக்க படுகின்றது.
ஐ.என்.எஸ் துருவ் என அழைக்கப்படும் இந்த கப்பல், அணு ஆயுத ஏவுகணைகளை நீண்ட தூரத்தில் கண்காணிக்கும் திறன் கொண்டது.
இது இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அணுசக்தி ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களை கண்காணித்து கடற்படையை எச்சரிக்கவும் கடல் படுகைகளை வரைபடமாக்கும் திறனையும் துருவ் கொண்டுள்ளது.
கண்காணிப்பு கருவிகள் நிரம்பிய மூன்று குவிமாட வடிவ தொலைத்தொடர்பு கோபுரங்களை சிறப்பு கொண்டுள்ள இந்த கப்பலின் எடை 5,000 தொன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கப்பலில் இருந்து 14 மெகாவாட் மின் சக்தியை தயாரிக்க முடியும் எனவும் இது எதிரி ஏவுகணைகளை கண்காணிப்பதுடன், உள்நாட்டில் நடத்தப்படும் ஏவுகணைகளின் வழக்கமான சோதனைகளின் தரவை துல்லியமாக வழங்குவதற்கும் உதவுகிறது.
யுவான் வாங் 5 கப்பலை எதிர்கொள்ளும் துருவ் கப்பல்
ஒப்பீட்டளவில் சீனாவின் யுவான்வாங் தொடர் வரிசை கப்பல்களுக்கு இது நிகரில்லை என்றாலும் தற்போது இலங்கை வந்துள்ள யுவான்வாங் 5 ரக கப்பலில் உள்ள அதே நவீன செயற்கைக்கோள், ஏவுகணை கண்காணிப்பு வசதிகளை துருவ் கப்பல் கொண்டுள்ளது.
எவ்வாறாயினும் சீனாவின் யுவான் வாங் 5 கப்பலின் அத்தனை சிறப்பம்சங்களையும் இந்தியாவின் துருவ் கப்பல் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் எனவும் மேற்குலக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்தி
மிரட்ட வைக்கும் சீன கப்பலால் இந்தியாவுக்கு ஏற்பட போகும் பாதிப்புக்கள்..! வெளியாகிய அதிர்ச்சி தகவல் |
சீனக்கப்பலின் வருகைக்கு பதிலடி..! இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உளவு விமானம் |
தேவையில்லாமல் இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்..! இந்தியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா |