இலங்கையை விட்டு வெளியேறவுள்ள சீனக்கப்பல்..! ஆய்வுப் பணிகள் நிறைவு
சீனாவின் ஷி யான் 6 ஆய்வுக் கப்பலின் கடல்சார் ஆய்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
இந்த கப்பல் கொழும்பு பெந்தர கடற்பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக நாரா எனப்படும் தேசிய நீரியள்வள ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி கமல் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் இலங்கை கடற்பரப்பில் நேற்று ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்ததாகவும், குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சீனக்கப்பலுக்கு 48 மணித்தியாலங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்நிலைகளின் மாதிரி
அத்துடன், நேற்று பிற்பகல் 1 மணி வரை கொழும்பு துறைமுகத்தில் ஷி யான் 6 நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், கடல் நீரின் வெப்பநிலை, கடல் நீரோடைகளின் நிலை, அது மீன்களை எவ்வாறு பாதிக்கிறது, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடல் நீரின் வெவ்வேறு நீர்நிலைகளின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவையும் ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீரியல்வள ஆய்வு நிறுவன கூறியுள்ளது.
சீன ஆய்வுக் கப்பலின் இந்த ஆய்வு நடவடிக்கைகளில் நிறுவனத்தின் 4 உறுப்பினர்களும் சிறிலங்கா கடற்படையின் 2 உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில், இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி சீனாவின் "ஷி யான் 6' ஆய்வுக் கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தமை குறிப்பித்தக்கது.