இம்மாதம் கொழும்புக்கு விரைகிறது சீன குழு
கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடலில் தீப்பிடித்து எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை அகற்ற சீன நிறுவனம் உட்பட நான்கு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) தெரிவித்துள்ளது.
கப்பலை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்காக கப்பலுக்குச் சொந்தமான சிங்கப்பூர் நிறுவனம் கேள்வி கோரியதைத் தொடர்ந்து நான்கு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டதாக அந்த ஆணையத்தின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர (Darshani Lahanthapura)தெரிவித்தார்.
அதன்படி, முதற்கட்டமாக எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை ஆய்வு செய்வதற்காக ஷாங்காய் நகரில் இருந்து சீனக் குழுவொன்று இம்மாதம் இலங்கை வரவுள்ளது.
கப்பல் மூழ்கிய இடத்திலும், அருகில் மூழ்கிய கொள்கலன்களிலும் கடலுக்கு அடியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருமதி லஹந்தபுர தெரிவித்தார்.
அந்த அவதானிப்புகளின்படி, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை பிரிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் செயல்படும். முன்னதாக, கப்பலை இழுத்துச் செல்ல திட்டமிடப்பட்ட நிலையில், பணிகள் மேற்கொள்ள முடியாததால், கப்பலை பிரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கப்பல் மூழ்கிய இடத்தில் சுமார் 400 கொள்கலன்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி தர்ஷனி லஹந்தபுர மேலும் தெரிவித்துள்ளார்.
மே 20 அன்று, எக்ஸ்பிரஸ் பேர்ள், 1486 கொள்கலன்களுடன், கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் உள்ள கடலில் தீப்பிடித்து மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.