ஆயுதம் தரித்த சீனக் கப்பல் சிறிலங்காவுக்குள்?அச்சுறுத்தல் அல்ல என்கிறது அரசாங்கம்
சீன உரக்கப்பலால் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனவும், அக்கப்பலில் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருள் காணப்படுவதாக இதுவரையில் எவ்வித தகவலும் இல்லை எனவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பினை எதிர்பார்த்துள்ளமையின் காரணமாகவே சீனக்கப்பல் திரும்பிச் செல்லாமல் சிறிலங்காவை அண்மித்து நங்கூரமிட்டுள்ளதாக, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான, டலஸ் அழகப்பெரும மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் டலஸ் அழகப்பெரும, “சீன இரசாயன உரக்கப்பல் பிரச்சினையால் சிறிலங்கா - சீனாவுக்கிடையில் எவ்வித இராஜதந்திர முரண்பாடும் ஏற்படாது.
இது தொடர்பில் விவசாய அமைச்சின் செயலாளர் மிகவும் தெளிவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
எனினும் நாம் கடன் சான்றுப் பத்திரத்தை விடுவித்துள்ளமையால் இவ்விடயத்தில் தொழிநுட்பச் சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்தச் சிக்கலுக்கான தீர்வு காணப்படும் வரை மாத்திரமே கப்பல் எமது கடற்பரப்பில் தரித்துள்ளதே தவிர , வேறெந்த நோக்கத்திற்காகவும் கிடையாது.
குறித்த உரத்தினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெறப்போவதில்லை என்று விவசாயத்துறை அமைச்சர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு ஆயுதக் கப்பல் இல்லை என்பதால் அச்சுறுத்தல் எதுவும் கிடையாது” என்றார்.
இதேவேளை, அமைச்சர் உதய கம்மன்பிலவும் “இந்தக் கப்பல் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது எனவும், கப்பலுக்குள் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருள் உள்ளிட்டவை காணப்படுவதாக இதுவரையில் எவரும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.