கோட்டாபயவின் 'ஒரே நாடு - ஒரே சட்டம்'- தனது பார்வையை திருப்பிய வத்திக்கான்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட 'ஒரு நாடு, ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணி குறித்து வத்திக்கான் கவனம் செலுத்தியுள்ளது.
வத்திக்கானில் உள்ள கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படும் செய்தி இணையத்தளமான Vatican News, 'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற தலைப்பில் அரச தலைவர் செயலணி குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இது குறித்து தெரிவித்துள்ளது.
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் அரச தலைவர் செயலணியின் உறுப்பினர்களை பெயரிடும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து, அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ திட்டத்தைக் கைவிட்டு அதற்குப் பதிலாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குமாறு இலங்கை ஆயர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வத்திக்கான் செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, 13 பேர் கொண்ட அரச தலைவர் செயலணியை நியமித்து, "கடுமையான பௌத்த பிக்கு ஒருவரின்" தலைமையில், இந்த யோசனையை ஆய்வு செய்து சட்டமூலமொன்றை உருவாக்கினார். இலங்கையின் பெரும்பான்மை பௌத்த சமூகத்தின் ஆதரவுடன் 2019 ஆம் ஆண்டு அரச தலைவராக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் முழக்கம் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கருத்துருவாக இருந்ததாக வத்திக்கான் செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.
ஞானசார தேரர் இலங்கையில் சர்ச்சைக்குரிய நபர் என ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான அரச தலைவர் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறித்தும் வத்திக்கான் செய்தி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் அவரது பொதுபல சேனா அமைப்பு ஈடுபட்டதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக கடந்த ஆண்டு அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் தண்டனை விதிக்கப்பட்ட சில மாதங்களில் மன்னிக்கப்பட்டார் என்று வத்திக்கான் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 'ஒரு நாடு - ஒரே சட்டம்' தொடர்பான அரச தலைவர் செயலணியில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமையும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
You may like this