சுகாதார அமைச்சை குற்றம் சாட்டும் சி.ஐ.டி! வழங்கப்பட்ட கால அவகாசம்
இலங்கைக்கு (Sri Lanka) தரமற்ற இம்யூனோகுளோபின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்மை தொடர்பான விசாரணைகளுக்கு சுகாதார அமைச்சும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அந்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தரமற்ற இம்யூனோகுளோபின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் அண்மையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை
இந்த நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் மாளிகாகந்த நீதவான் நீதிபதி லோச்சனி அபேவிக்ரமவிடம் (Lochani Abeywickrama) தெரிவித்துள்ளது.
விசாரணைகளுக்காக கோரப்பட்ட ஆவணங்களை சுகாதார அமைச்சு இதுவரை பெற்றுக் கொடுக்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றில் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் சுகாதார அமைச்சு குறித்த ஆவணங்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்க வேண்டுமென லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் சுகாதார அமைச்ச நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |