மிக் விமான மோசடி விசாரணை! தயாராகிறது குற்றப்புலனாய்வு திணைக்களம்
இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி குறித்த வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று(02.09.2026) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தசம்பவம் தொடர்பில், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
நிதி புலனாய்வு பிரிவு
முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் பிரிவு அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்குரிய ஆவணத் தொகுப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.
2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்காக உக்ரைனில் இருந்து நான்கு MiG-27 விமானங்களை கொள்வனவு செய்வதற்கும், ஏற்கனவே இருந்த சில விமானங்களை பழுதுபார்ப்பதற்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார். இந்தக் கொள்வனவு தொடர்பில் பின்னர் முறைகேடுகள் மற்றும் அரச நிதி மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கோட்டாபய ராஜபக்ச
குறிப்பாக, இந்த ஒப்பந்தம் அரசாங்கத்துக்கு அரசாங்கம் (Government-to-Government) என்ற அடிப்படையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், பணம் உக்ரைன் அரச நிறுவனத்துக்கு நேரடியாக செலுத்தப்படாமல் Bellimissa Holdings Limited என்ற மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்தப்பட்டதாக விசாரணைகளில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவை, உக்ரைன் நிறுவனத்துடன் தொடர்புடைய உதயங்க வீரதுங்க உள்ளிட்ட தரப்பினர் சந்தித்ததாக விசாரணை ஆவணங்களை மேற்கோள் காட்டிய செய்திகள் தெரிவிக்கின்றன.
விமானப்படைத் தளபதி முன்னதாக வழக்கமான டெண்டர் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனக் கோரியிருந்த நிலையில், 2006 பெப்ரவரி 6ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் உக்ரைன் தரப்பின் முன்மொழிவு முன்னெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், கோட்டாபய ராஜபக்ச மிக் விமான கொள்வனவில் ஊழல் செய்தார் என்பது நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை.
எனினும் அவர் முன்னர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், விமான கொள்வனவில் முறைகேடு இடம்பெறவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
உதயங்க வீரதுங்க தொடர்பான தற்போதைய நிலை இந்த விவகாரத்தில் முக்கிய சந்தேகநபராகக் குறிப்பிடப்படும் முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் தொடர்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |