வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் : வழங்கப்பட்டன ஜம்பர், தகர கோப்பை
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன வெலிக்கடை சிறைச்சாலையின் விசேட பாதுகாப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல், முன்னாள் அமைச்சருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டுகள் வீதம் 14 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்ததுடன், அந்தச் சிறைத்தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்றும், அத்துடன் இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
வெலிக்கடை சிறைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர்
நேற்று(01) மாலை 5 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரதான வாயிலுக்குள் நுழைந்ததும், கைதிகளுக்கு வழங்கப்படும் இரண்டு ஜம்பர்கள், தகரத் தட்டு, தகரக் கோப்பை மற்றும் கூடை என்பன வழங்கப்பட்டதுடன், அதன் பின்னர் அவர் ஒரு கைதியாகப் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட கைதி இலக்கம் சிறைத்தண்டனைக் காலம் முடியும் வரை பயன்படுத்தப்படவுள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்படும் போது ஏற்படும் கடுமையான மன உளைச்சல் காரணமாக சிறைச்சாலையில் சேர்க்கப்படும் மற்ற கைதிகளைப் போலவே பியங்கர ஜயரத்னவுக்கும் மனநல ஆலோசனை சேவை வழங்கப்பட்டதுடன், நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் சிறைச்சாலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் மற்றும் கிடைக்கும் சலுகைகள் குறித்து அதிகாரிகள் அவருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
சாதாரண கைதியை போலவே நடத்தப்படுவார்
சாதாரண கைதியைப் போலவே காலை 6 மணிக்கு வார்டிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் வார்டுக்கு அனுப்பப்படும் முன்னாள் அமைச்சருக்கு வீட்டிலிருந்தோ அல்லது வெளித் தரப்பினரிடமிருந்தோ உணவு பெறுவதற்கு அனுமதி இல்லை என்பதுடன், சிறைச்சாலையிலிருந்து வழங்கப்படும் மூன்று வேளை உணவை மட்டுமே பெற முடியும். அத்துடன் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் குடும்ப சந்திப்புகளின் போது சுகாதாரப் பொருட்களை மட்டுமே பெறுவதற்கு அனுமதி உண்டு.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன இன்று வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதுடன், அங்கு அவரது திறன்கள் மற்றும் ஆற்றல்கள் ஆராயப்பட்ட பின்னர், மேசன், தச்சு, அச்சு, பேக்கரி அல்லது சமையல் போன்ற சிறைச்சாலையில் இயங்கும் பொருத்தமான வேலைப் பிரிவொன்றுக்கு அவர் அனுப்பப்படவுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |