பிள்ளையான் தொடர்பில் சிஐடி நீதிமன்றுக்கு விடுத்த அறிவிப்பு
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பிள்ளையான் அடுத்த நீதிமன்ற திகதியில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என சிஐடி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளளது.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களை, கல்கிசை நீதவான் சதுரிகா டி சில்வா முன்னிலையில் முற்படுத்திய போதே சிஐடியினர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர். .
அத்துடன், நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள், இந்த சம்பவத்தில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வாக்குமூல பதிவு
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 127 இன் கீழ் நீதவான் முன்னிலையில் இந்த வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நடராசா நகுலேந்திரன் எனப்படும் ‘சிம்பு’, கதிர்காமர் தம்பி ஜெயகீசன் எனப்படும் ‘ஜெயந்தன்’ மற்றும் நிமல் தேவசுகன் எனப்படும் ‘ஜெயகாந்தன்’ ஆகிய மூன்று சந்தேக நபர்களே இவ்வாறு நீதினமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
அதன்போது, சந்தேகநபர்களான மூவரும் இந்த வாக்குமூலங்களை சுதந்திரமாகவும் எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் வழங்குவதாக தங்கள் சட்டத்தரணி அசோக வீரசூரிய மூலம் நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சட்டத்தரணி வீரசூரியவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நீதவான் முடிவு செய்துள்ளார்.
நேரில் கண்ட சாட்சி
மேலும், கல்கிசை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் சந்தேக நபர்களை முற்படுத்திய சிஐடி, கடத்தலை நேரில் கண்ட சாட்சி ஒருவர் இருப்பதாகவும், அவர் சம்பவம் தொடர்பாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் கடத்தலில் ஈடுபட்டதாக சிஐடி மேலும் நீதிமன்றத்திற்கு கூறியுள்ளது.
சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி அசோக வீரசூரிய, சிஐடி சந்தேக நபர்களை தமிழில் விசாரித்ததாகவும், ஆனால் சிங்களத்தில் எழுதப்பட்ட வாக்குமூலங்களுக்கு அவர்களின் கையொப்பங்களைப் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்காரணமாக சந்தேக நபர்களுக்கு தாங்கள் கையெழுத்திட்ட வாக்குமூலங்களின் உள்ளடக்கம் குறித்து எதுவும் தெரியாது என்றும், வழக்கு குறித்து தங்களுக்கு என்ன தெரியும் என்பதையும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை புலனாய்வாளர்களிடம் கூறியிருப்பதாகவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உண்மைகளை பரிசீலித்த பின்னர், நீதிபதி மேலதிக விசாரணையை ஒத்திவைத்து, வழக்கின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
