மீண்டும் வந்திறங்கிய காற்றாலை நிறுவனம்: மன்னாரில் கடும் பதற்றம் - விரைந்த காவல்துறை
மன்னாரில் (Mannar) காற்றாலை அமைப்பதற்கு மணல் ஆய்வு மேற்கொள்ள வந்த நிறுவனத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் மன்னார் பேசாலை கிராமத்தின் தென்பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.
இதனால், குறித்த பகுதியில் மிகவும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த பகுதியில் அமைப்பதாக முன்பே முன்மொழியப்பட்ட 14 காற்றாலைகளில் பத்து காற்றாலைகளுக்கான மணல் ஆய்வு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அங்கு விரைந்த பிரதேச மக்கள் இந்நடவடிக்கையை நிறுத்துமாரு கோரியுள்ளனர். இருப்பினும், மக்களை கடந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நிறுவனத்திற்கு சார்பாக நடவடிக்கையை முன்னெடுக்குமாரு தெரிவித்துள்ளனர்.
இதனால் அங்கு திரண்ட மக்கள், குறித்த நிறுவனத்தின் வாகனங்களை முற்றுகையிட்டு வாகனத்தின் முன் படுத்து தமது எதிர்பை வெளியிட்டுள்ளனர்.
இதனால் சற்று நேரத்திற்கு குறித்த நடவடிக்கையை நிறுத்திவைக்குமாறு காவல்துறையினரால் குறித்த நிறுவனத்தினருக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் கடந்த 26 ஆம் திகதி இரவும் மன்னாரில் காற்றாலை அமைப்பதற்கான பொருட்கள் தீவுக்குள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மக்களால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இன்று மணல் ஆய்வு நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
