இதுவே எனது நிலைப்பாடு..! காணி விடுவிப்பு தொடர்பில் டக்ளஸ் கூறிய விடயம்
சிறிய பிரச்சினைகளை பெரிதாக்கி தீரா பிரச்சினையாக்காது அவற்றை தீர்வு கிடைக்கும் வகையில் முன்னெடுத்து செல்லவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மீதமிருக்கும் மக்களின் காணிகளை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அவை அனைத்தும் கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கான நடவடக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உயர்பாதுகாப்பு வலயம்
மேலும், ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகளுடன் இன்னும் பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என நம்புவதாக தெரிவித்த அமைச்சர் வனவள திணைக்களம் தொல்பொருள் திணைக்களம் போன்றவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளும் அதில் உள்ளடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து விடுவிக்கக் கூடிய பகுதிகளாக பாதுகாப்பு தரப்புனரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 21 இடங்களில் 7 இடங்களை வழிபாட்டுக்காக விரைவில் விடுவிக்குமாறு ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
இதேநேரம், 30 வருடங்களுக்கு மேலாக செல்லமுடியாத நிலையிலும் ஆலய வழிபாடுகளை மக்கள் மேற்கொள்ள முடியாத நிலையிலும் உள்ள ஏனைய இடங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாது வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் உள்ள வழிபாட்டிடங்கள் உள்ளிட்ட மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாயக் காணி நிலங்களை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடிவருவதாகவும் விரைவில் சாதகமான நிலை உருவாக்கப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |