ஏப்ரலில் உள்ளூராட்சி - செப்டெம்பரில் மாகாண சபை : அநுர அரசின் அடுத்த நகர்வு!
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் (Local government election) , செப்டெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் (Provincial Council Election) நடத்த ஜனாதிபதி அநுர (Anura Kumara Dissanayake )தலைமையிலான அரசு திட்மிட்டுள்ளது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, அடுத்த வருடம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலுக்கான திகதிகளை அரசு தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களைக் கோரும் வகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடத்தவும், 7 ஆண்டுகளுக்கும் மேலாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் செப்டெம்பர் மாதம் நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது எனவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததையடுத்து நவம்பர் மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) கூடியிருந்தது.
குறித்த சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |