வெளிநாடுகளில் மூடப்படும் சிறிலங்கா தூதரகங்கள் -அமைச்சர் பீரிஸ் வெளியிட்ட அறிவிப்பு
வெளிநாடுகள் சிலவற்றிலுள்ள சிறிலங்கா தூதரக அலுவலகம் மற்றும் கொன்சியுலர் அலுவலகங்கள் மூடப்பட்டமையானது தற்காலிகமானவை என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மூடப்பட்ட அலுவலகங்களை ஒரு வருட காலப்பகுதிக்குள் மீண்டும் திறப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நிதி நிலைமை காரணமாக அவுஸ்ரேியாவின் சிட்னி கொன்சியுலர் அலுவலகம் , ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் சுவிடனில் உள்ள தூதரக அலுவலகம் ஆகியவற்றை மூட வேண்டி ஏற்பட்டதாகவும் கூறினார்.
நாட்டின் பொருளாதார நிலைமையை அடிக்கடி கவனத்தில் கொண்டு இந்த அலுவலகங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்வோம் எனவும் நாட்டின் நிதி நிலைமை சீராகும் வரையில் தற்காலிக நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
