தேங்காய் தட்டுப்பாட்டுக்கு தீர்வு : யாழில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை
வடக்கு தென்னை முக்கோண வலயத்திற்கான நடவடிக்கைகளின் ஆரம்பமாக டிசம்பருக்குள் 650000 தென்னைகளை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிராந்திய முகாமையாளர் ஈஸ்வரன் சற்குணன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், 2030ம் ஆண்டு மொத்த உற்பத்தியில் 4200மில்லியன் தேங்காயை உற்பத்தி செய்யும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தென்னங்கன்றுகள் இலவசம்
இந்த வருட டிசம்பர் மாதத்திற்குள் 650000 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கும் திட்டத்தில் 72000 தென்னங்கன்றுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
இரண்டு நடுகைத்திட்டம் மூலம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றது என்றார்.
அவசர நடவடிக்கை
தென்னை செய்கையில் வெள்ளை ஈ சேதம் உள்ளிட்ட பூச்சிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை (Coconut Cultivation Board) விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
குறித்த திட்டத்தின் முதற்கட்டம் அடுத்த மாதம் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயகொடி (Sunimal Jayakody) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அனைத்து மாவட்டங்களிலும் தென்னை செய்கை வாரத்தை அறிவித்து, வெள்ளை ஈ தொல்லைக்கு அவசர நடவடிக்கையாக அதை செயற்படுத்த முடிவு செய்துள்ளோம்.
வெள்ளை ஈ பிரச்சினை
அதன்படி, இந்த திட்டத்தை ஜூலை 14 ஆம் திகதி நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்குவோம். வெள்ளை ஈ பிரச்சினைக்கு தீர்வாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து தென்னை மரங்களும் தண்ணீர் தெளிக்கப்பட்டு கழுவப்படும்.
இது ஒரு பெரிய அளவிலான நடவடிக்கை, ஆனால் தற்போது அதற்குத் தேவையான மனிதவளத்தையும் இயந்திரங்களையும் நாங்கள் தயார் செய்து வருகிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை அண்மைக்காலமாக நாட்டில் ஒரு தேங்காயின் விலை 200க்கு மேல் காணப்பட்ட நிலையில், தற்போது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
