வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படவுள்ள தென்னை : அமைச்சர் அறிவிப்பு
வடக்கில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பளை பிரதேசத்தில் உள்ள பிராந்திய தென்னை பயிர்ச்செய்கை சபைக்கு நேற்று (01)விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் அங்கு உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், " போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை. எனவே, வடக்கில் இருந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டும்.
தென்னைப் பயிர்ச்செய்கை
தென்னைப் பயிர்ச்செய்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வடக்கில் இவ்வருடத்தில் 16 ஆயிரம் ஏக்கர் காணியில் தென்னை பயிர்ச்செய்கை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது காணிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவே இப்படியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வறுமை ஒழிப்பு என்பது எமது கொள்கைகளில் உள்ள பிரதான விடயமாகும். அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடக்கில் அதிகளவு வறுமை உள்ளது. இந்நிலையிலிருந்து மீள வேண்டும். போரால் அனைத்தையும் இழந்துள்ள மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும்.
போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் இல்லை. வறுமையை ஒழிக்காமல் நாட்டின் அபிவிருத்தி பற்றி சிந்திக்க முடியாது. தென்னைப் பயிர்ச்செய்கையை சரியாக கையாண்டால் எதிர்காலத்தில் செழிப்பான பொருளாதாரம் இப்பகுதியில் மலரக்கூடும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
