நுவரெலியாவில் நிலவும் குளிர் காலநிலை : குவியும் சுற்றுலாப் பயணிகள்
நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் குளிரான காலநிலை மற்றும் வார விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நுவரெலியாவின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகாலை நேரங்களில் துகள் உறைபனிப் பொழிவும், பகல் நேரங்களில் உஷ்ணமான காலநிலையும், மாலை வேளைகளில் பனிமூட்டமும் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனுடன் கடும் குளிரான காலநிலை இடையிடையே மாறுபட்டு நிலவி வருவதால், இவ்விதமான காலநிலையை சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
இந்த இதமான காலநிலையை அனுபவிக்க இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் மட்டுமன்றி, வெளிநாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றனர்.

இதன் காரணமாக நுவரெலியாவிற்குள் நுழையும் பிரதான வீதிகளில் சில நேரங்களில் வாகனங்கள் நீண்ட அணிவகுப்பாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக வெள்ளிக்கிழமை மாலை முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்ததுடன், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகியுள்ளது.
சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம்
இந்தநிலையில் நுவரெலியாவில் உள்ள அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் பெருந்திரளாகக் காணப்பட்டனர்.

குறிப்பாக விக்டோரியா தாவரவியல் பூங்கா, பழமையான பிரதான அஞ்சல் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், நுவரெலியா–பதுளை பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ள கிரகரி வாவி பகுதிகளில் காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நுவரெலியாவில் சுற்றுலாவை நம்பி வாழும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம், மோசமான காலநிலையின் பின்னர் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |