இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்
உலக வங்கி குழுமத்தின் அங்கத்துவ அமைப்பான சர்வதேச நிதி நிறுவனம் (IFC), இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயர்மட்ட முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது.
இலங்கை வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையிலிருந்து நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காகவும் குறித்த முதலீட்டுத் திட்டத்தை இன்று (25) அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இது இலங்கையின் தனியார் துறைக்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்துவதாக சர்வதேச நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிதி அணுகலை விரிவுபடுத்துதல்
இந்த விரிவான நிதியானது, சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான நிதி அணுகலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிப்பாக பெண்களுக்குச் சொந்தமான வணிகங்கள் மற்றும் விவசாய வணிகத் துறையை வலுப்படுத்துவதில் இது கவனம் செலுத்துவதாக சர்வதேச நிதி நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைப் பொருளாதாரத்தின் இத்தகைய முக்கிய துறைகளைக் குறிவைப்பதன் மூலம், உள்ளடக்கிய வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், பின்தங்கிய குழுக்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த நிதி உதவி எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முதலீடு இலங்கையின் முன்னணி மூன்று தனியார் வணிக வங்கிகளில் மூலோபாய ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்படும் நிதி உதவியில் 50 மில்லியன் டொலர் கடன் உதவியாகும். 80 மில்லியன் டொலர் அபாயப் பகிர்வு வசதிகளாகவும், எஞ்சிய 36 மில்லியன் டொலர் வர்த்தக நிதி ஆதரவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |