தொடர்மாடி வாகனத் தரிப்பிடங்கள் - கொழும்பு - புறநகர் பகுதிகளில் நிர்மாணிப்பு
கொழும்பிலும், அதனை அண்மித்த புறநகர் பகுதிகளிலும், வாகனங்களால் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்காக, கொழும்பில் நான்கு தொடர் மாடி வாகன தரிப்பிடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் கீழ், நகர அபிவிருத்தி அதிகாரசபை, தனியார் துறையின் பங்களிப்புடன் குறித்த வாகன தரிப்பிடங்களை நிர்மாணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் இரண்டு வாகன தரிப்பிடங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபையும், ஏனைய இரண்டு வாகன தரிப்பிடங்களை தனியார் நிறுவனம் ஒன்றும் நிர்மாணிக்கின்றன.
வாகன தரிப்பிடங்கள்
கொழும்பு டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாகவும், நாரஹேன்பிட்டி, பழைய மீன் சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த வாகன தரிப்பிடங்கள் அமைக்கப்படுகின்றன.
அவற்றில், தனியார் துறையினரின் பங்களிப்பின் கீழ் கொழும்பு 02, யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்ட பொது வாகன தரிப்பிடம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில் நேற்று மக்களின் பாசனைக்காக கையளிக்கப்பட்டது.
இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றினால் 1,400 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இதன் உரிமை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றப்படவுள்ளது.
இந்த எட்டு மாடி வாகன நிறுத்துமிடத்தில், சுமார் 300 வாகனங்களை தரித்திருக்கக்கூடிய வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
