தென்னிலங்கையில் ஒரே நாளில் நடந்த பாரிய பேருந்து விபத்துகள்! (படங்கள்)
இலங்கையின் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் சுமார் நான்கு பேருந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் சிலர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜுகம விபத்து
இந்த நிலையில், நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பகுதியில் பாரவூர்தியுடன் தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வதுபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய விபத்து
அதேவேளை, குளியாப்பிட்டியின் கரண்டிப்பல பகுதியில் பாடசாலை பேருந்தொன்று போக்குவரத்துக்கு சபையின் பேருந்தொன்றுடன் விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொட்டதெனி விபத்து
மேலும், தனியார் பேருந்தொன்று கனரக வாகனமொன்றுடன் கொட்டதெனியாவ பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இன்று காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
