வவுனியாவில் தங்கநகைகளை கொள்ளையிட்ட குழு கொழும்பில் சிக்கியது
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகளை கொள்ளையடித்த ஏழு பேரை வவுனியா பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (11) காலை கைது செய்துள்ளனர்.
ஜனவரி 05ஆம் திகதி இரவு இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைதுசெய்யும் நோக்கில் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் பலகோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் கொள்ளைச் சம்பவம் தொடர்பான விபரங்களை வெளிக்கொணர்ந்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் தென்னிலங்கையில் இருந்து வந்துள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட காவல்துறையைச் சேர்ந்த குழு கிராண்ட்பாஸ் பகுதியில் பல நாட்களாக தங்கியிருந்த ஐந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதில் 4 தங்க மோதிரங்கள் மட்டும் கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த நிலையில் மற்ற நகைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கும்பலில் உள்ள சந்தேகநபர்கள் அனைவரும் 19 முதல் 33 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.