பொலிஸாரின் தடையையும் தகர்த்து மேற்கொள்ளப்பட்ட படுகொலை நினைவேந்தல்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
பொலிஸாரினால் தடைகள் ஏற்படுத்த முற்பட்டபோதும் நிகழ்வு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளை பிற்றிய நிலையில் மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபியருகே நடைபெற்றது. இந்நிகழ்வு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு கிளையின் தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணி தலைவர் கி.சேயோன், வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தி.தீபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களின் ஆத்மா சாந்திவேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வு நடைபெற்றபோது நினைவுத்தூபி வளாகத்தினை சூழ பொலிஸாரும் பெருமளவு புலனாய்வுத்துறையினரும் குவிந்திருந்ததன் காரணமாக அங்கு அச்ச சூழ்நிலையேற்பட்டது.
குறித்த நிகழ்வினை நிறுத்துவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பொலிஸாரின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாது நிகழ்வினை நடத்துமாறு ஏற்பாட்டாளர்களை அறிவுறுத்தியதன் காரணமாக நிகழ்வு நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு ஜனவரி 28ம் திகதி இறால் வளர்ப்பு பண்ணையில் இடம்பெற்ற படுகொலையும், 1992 ஆம் ஆண்டு ஜூன் 12ம் திகதி இடம்பெற்ற மகிழடித்தீவு படுகொலையும் சேர்த்து ஏறக்குறைய 239பேர் படுகொலைடி செய்யப்பட்டிருந்தனர்.
அங்கு படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவு கூரும் வண்ணமே கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி 2000ம் ஆண்டு மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









