விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ள இழப்பீட்டுத் தொகை
2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானை தாக்குதலினால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான இழப்பீடுகள் குறித்து விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, அனைத்து இழப்பீடுகளையும் எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில், நாடு முழுவதும் நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்களுக்கு கணிசமான சேதங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
80 மில்லியன் ரூபா இழப்பீடு
இதுவரையில் பாதிக்கப்பட்ட 80 சதவீதமான விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட 80 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் மீதமுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஜனவரி 05 ஆம் திகதிக்குள் உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக இழப்பீட்டுத் தொகையை வரவு வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், மிகக் கவனமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், 2024-2025 பெரும்போகம் தொடர்பான இழப்பீடுகளை பெப்ரவரி மாத ஆரம்பத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |