எல்லை மீறும் குற்றப்புலனாய்வு பிரிவினர்! சமூக செயற்பாட்டாளர் சீற்றம்
குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை (20) மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொள்ளவுள்ளதாக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் (Rajkumar Rajeevkanth) தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை மேற்கொள்வதற்காக எந்தவொரு முன் அனுமதியுமின்றி குற்றப்புலாய்வு பிரிவினர் இன்று (17) திருகோணமலையில் (Trincomalee) உள்ள தனது தாயின் வீட்டுக்கு சென்றுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக தான் குறித்த முறைப்பாடை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நடவடிக்கை
அந்த குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இன்று மூன்றாவது தடவையாகவும் திருகோணமலையில் உள்ள எனது தாயின் வீட்டிற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பில் (Colombo) எனக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை என்னால் கடந்து செல்ல முடியும். எனினும், தாயின் வீட்டுக்கு முன் அறிவித்தலின்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
குற்றப் புலானாய்வுப் பிரிவினர், தன்னைப் பற்றிய முழுமையான விபரங்களை அறிந்துள்ள போதிலும், தொடர்ச்சியாக குடும்பத்தாருக்கு தொந்தரவு செய்வதை அனுமதிக்க முடியாது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
ஏற்கனவே, கடந்த வருடம் நள்ளிரவு 12 மணிக்கு திருகோணமலை வீட்டுக்கு சென்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த பின்னணியில், எந்தவொரு அனுமதியுமின்றி தொடர்ச்சியாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மோசமான அத்துமீறல் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் இந்த நடவடிக்கையை நான் எதிர்க்கிறேன். இதற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடை மேற்கொள்ளவுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |