வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தால் முறைப்பாடு!
முறையற்ற விதமாக தொண்டைமானாறு வெளிக்கள நிலைய பரீட்சையை நடாத்தும் பாடசாலைகளின் அதிபர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தால் முறைப்பாடொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரச கரும நேரத்தை மற்றும் அரச வளத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை, அனுமதி பெறாமல் அரசசார்பற்ற நிறுவனத்துக்கு முறைகேடாக நிதி வழங்கியமை தொடர்பிலும் விரிவான விசாரணையொன்றை கோரியுள்ளனர்.
முறைகேடுகள்
மேலும், குறித்த முறைப்பாட்டில், அண்மைக்காலமாக அரசார்பற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டைமானாறு வெளிக்கள நிலையம், ஆரம்பகால நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களிலிருந்து விலகி, வெறுமனே பரீட்சைகள் மூலம் இலாபமீட்டும் நோக்கில் முறைகேடுகள் நிறைந்த நிறுவனமாக செயற்பட்டுவருகிறது.

அந்நிறுவனத்தின் முறையற்ற செயன்முறைகள், பாடசாலைகளில் செயற்படுத்தப்படுவதை கட்டுப்படுத்துமாறு எழுத்துமூலமான கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தோம்.
முறைகேடுகள் நிறைந்த குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகள் பாடசாலைகளில் ஊக்குவிக்கப்படக்கூடாது என்பதன் அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு மேற்கொண்டதன் அடிப்படையில், குறித்த நிறுவனத்தினால் பாடசாலைகளுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் முறையற்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது என வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் வடமாகாண கல்வி திணைக்களம் என்பன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் இணக்கப்பாட்டை எட்டியிருந்தன.
எனினும், அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகளை சில அரச பாடசாலை அதிபர்கள், குறித்த நிறுவனத்துக்கு பரீட்சைக் கட்டணத்தினையும் செலுத்தி பாடசாலை நேரத்தில் முறையற்ற விதமாக செயற்படுத்துகின்றனர். ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
