சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் உயிரிழந்த சிறுவன் : விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ரணில் பணிப்புரை
அம்பாறையிலுள்ள சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் காவல்துறையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கேற்ப, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்த தீபன் தர்சான்ந் எனும் 15 வயதான சிறுவன் மர்மான முறையில் அண்மையில் உயிரிழந்திருந்தார்.
மரணம் தொடர்பான விசாரணைகள்
இந்த நிலையில், தமது மகனின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிறிலங்கா காவல்துறையினர் ஏற்கனவே முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த சிறுவனின் மரணத்துடன் வேறு தரப்பினர் தொடர்புபட்டுள்ளார்களா எனும் கோணத்தில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் இணங்காணப்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
விரிவான விசாரணைகள்
இதையடுத்து, ஆனந்த தீபன் தர்சான்ந்தின் மரணம் தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சிறிங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளதாக அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சிறுவனின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அவர் சிறிலங்கா தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் காவல்துறையினருக்கு பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |