ஸ்ரீலங்காவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய இராணுவப்பயிற்சி உண்மையா? ஊடகத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஸ்ரீலங்காவிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது என பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் அரசியல் பின்னணி, நிர்வாகம் மற்றும் அத்தகைய நடவடிக்கையின் அவசியம் ஆகியவற்றை மதிப்பீடு செய்த பின்னர் இது குறித்து பரிசீலிக்கப்படும். இதேவேளை வளர்ந்த மற்றும் ஜனநாயக நாடுகளும் இத்தகைய கட்டாய இராணுவப் பயிற்சி முறையை வழங்குகின்றனர். இந்த விடயத்துடன் இராணுவ மயமாக்கல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது.
நாட்டில் ஒழுக்கமான சமுதாயம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது குறித்து நாடாளுமன்றில் திட்டம் ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.