புறக்கணிக்கப்படும் மட்டக்களப்பு விவசாயிகள் - அதிகாரிகள் அசமந்தம் - விவசாயிகள் ஆதங்கம்!
"பெரும்போக அறுவடை முடிவடைந்து சிறுபோக விவசாய நடவடிக்கைகளுக்காக விவசாயிகள் தயாராகி வரும் நிலையில், இது தொடர்பில் மாவட்ட செயலகமோ அல்லது விவசாய திணைக்களத்தில் இருக்கும் அதிகாரிகளோ இதுவரை சிறுபோகம் பயிற்செய்கைக்கு உரிய எந்தவிதமான தயார்படுத்தல் நிலையிலும் இல்லாமல் காணப்படுகின்றனர்.
மட்டக்களப்பு விவசாயிகளுக்கு இன்னும் டீசல் கிடைக்கப்பெறவில்லை, யூரியா கிடைக்கப்பெறவில்லை, இரண்டரை ஏக்கர் க்கு என வரும்பொழுது ஐந்து ஏக்கர் திட்டம் கொண்ட மட்டக்களப்பு விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றனர்."
இவ்வாறு, இன்றைய தினம் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகாரசபையின் உப செயலாளர் ஜெயானந்தன் நிரஞ்சனகுமார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகாரசபை உறுப்பினர் சீனித்தம்பி நவயுவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு விவசாயிகளின் ஆதங்கம்
தொடர்ந்து கருத்துரைத்த அவர்கள்,
"மட்டக்களப்பில் 87500 ஏக்கர் சிறு போக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது, இந்த சிறு போக நெற்செய்கைக்காக மட்டக்களப்பில் குறைந்த அளவு குளங்களே காணப்படுகின்றது, இந்த குளங்களில் காணப்படும் நீர்மட்டமானது காலம் செல்லச் செல்ல குறைந்து செல்லுமாக இருந்தால் செய்கை பண்ணப்படும் நிலங்களின் அளவு குறைவடையும்.
இந்த நிலையில் நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களும் அது தொடர்பான எந்தவிதமான திட்டங்களையும், ஆயத்த நிலைகளையும் செய்வதில் அசமந்த போக்கில் உள்ளனர்.
மலிவு விலையில் பசளை வழங்குவோம் எனக் கூறினார்கள், ஆனால் எந்த விலை எமக்கு தெரியாது, நல்ல ஒரு மலிவு விலையில் வழங்குவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
MOP 500 ரூபாய்க்கு எடுத்தது தற்பொழுது 19,500 ரூபாய்க்கு கொண்டு வந்து வைத்திருக்கின்றார்கள், ஆகவே இவ்வாறான பிரச்சனைகளுடன் விவசாயிகள் இருக்கின்றார்கள், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அமைச்சர் மட்டத்தில் இருப்பவர்களும் சிறந்த முடிவை விரைவாக எடுத்து எங்களுக்கு அடுத்த சிறுபோகத்தை செய்வதற்கு ஒழுங்குபடுத்தி தர வேண்டும்.
UN ஆல் வழங்கப்பட்ட யூரியா உரம் குறைந்தது 4000 பேருக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருக்கின்றது, ஏனென்றால் நமது மட்டக்களப்பு மாவட்டம் ஐந்து ஏக்கர் விவசாயத் திட்டத்தை கொண்ட மாவட்டம் அந்த வகையில் ஒரு தாழ்த்தப்பட்ட இனமாக நாங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம்." இவ்வாறு தமது ஆதங்கத்தை முன்வைத்துள்ளனர்.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
