பயிலுநர் பட்டதாரிகளுக்கான நியமனம் - வெளிவந்த புதிய தகவல்
அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 53,177 பட்டதாரிகளின் நியமனங்களை ஜனவரி 3 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இவர்கள் அடிப்படைச் சம்பளமாக 31,490 ரூபாவையும் கொடுப்பனவுகளுடன் 41,490 ரூபா சம்பளத்தையும் பெறுவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
அவர்களில் ஏறக்குறைய 7,000 பேருக்கு ஒரு வருட பயிற்சி மார்ச் மாதத்துடன் முடிவடையும் என்பதனால் உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தென்னகோன் தெரிவித்தார்.
இன்று (5) அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொதுநிர்வாக அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தென்னகோன்,
இக்குழுவினர் மாகாண சபைகள், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் கீழ் பயிற்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
உள்ளூர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 45 வயதிற்குட்பட்ட பட்டதாரிகளின் குழுவிற்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிரந்தரமாக 21,000 பேர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படுவதாகவும் அவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வு விரைவில் நடத்தப்படும் என்றும் தென்னகோன் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மற்றும் அமைச்சின் ஆலோசகர் மஹிந்த மதீஹேவா ஆகியோரும் கலந்துகொண்டனர்.