பஸிலின் நாடாளுமன்ற பிரவேசம் - ராஜபக்ச குடும்பத்துக்குள் வெடித்தது மோதல்?
பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சர் பதவியை பெறவுள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்திற்குள் மோதல் வெடித்துள்ளது என கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ஜூலை 8 ம் திகதி பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழையத் தயாராகி வருவதால், ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே ஒரு மோதல் வெடித்துள்ளதென அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. அரசியல் வட்டாரங்களின்படி, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வசம் உள்ள நிதி அமைச்சை பசில் கேட்டுள்ளார், ஆனால் அவரின் கோரிக்கையை பிரதமரும் அவரது குடும்பத்தினரும் நிராகரித்தனர்.
ஜெயந்த கெட்டாகொட தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூலை 8 ஆம் திகதி தேசிய பட்டியல் எம்.பி.யாக பசில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார், அதனையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அமைச்சுப் பதவியைப் பெறுவார். ஆனால் அவருக்கான அமைச்சுப் பதவி இன்னும் இறுதி செய்யப்படவில்லை, ஏனெனில் பசில் நிதி அல்லது அதிகாரத்தில் ஏதேனும் ஒன்றைக் கோரியுள்ளார்.
ராஜபக்ஷ சகோதரர்களிடையே இது தொடரபில் கலந்துரையாடல்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முந்தைய ராஜபக்ஷ அரசாங்கத்தில் பஸிலுக்கு வழங்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பசில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வார் பின்னர் அமைச்சுப் பதவியைப் பெறுவார் என்ற செய்திகளைத் தொடர்ந்து அரசாங்கத்திற்குள் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டது. சில அரசாங்க கூட்டணி கட்சி உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்தனர், ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை ஒரு காரணம் என்று குறிப்பிட்டு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஜெயந்த கெட்டகொட அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படுவார் என்ற ஊகம் பரவி வருகிறது.
இருப்பினும், இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.