அரசாங்கத்திற்குள் குழப்ப நிலை தீவிரம்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்குள் குழப்ப நிலை வலுப்பெற்றுவருவதாக தெரியவந்துள்ளது.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கிய பின்னர் ஆளும் தரப்புக்குள் குழப்பங்கள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.
பொதுஜன பெரமுன முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கடந்த சில மாதங்களாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் செயற்பாடுகள் காரணமாக அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அரசாங்கத்திற்கான தமது ஆதரவினை அகற்றுவது குறித்து பல கட்சிகள் இரகசியமாக ஆராய்ந்து வருகின்றன. இந்த நிலையில் அண்மையில் 11 கட்சிகள் இணைந்து மாநாடு ஒன்றினையும் நடத்தியிருந்தன.
குறித்த மாநாட்டில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ச மீது மறைமுக குற்றச்சாட்டை முன்வைத்திருந்த விமல் வீரவன்சவின் பதவி பறிக்கப்பட்டதுடன், அமைச்சரைவயில் சிறிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது மாவட்ட அமைப்பாளர்களை கொழும்புக்கு அழைத்து அவசர சந்திப்பை நடத்தியிருந்த நிலையில், அமைச்சர்களை மாற்றுவதினாலோ அல்லது அமைச்சரவையில் மாற்றத்தைக் கொண்டு வருவதினாலோ பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
