ஒரே நாளில் இலங்கை மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! ராஜபக்சக்களின் அதிரடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
இந்த நிலையில், தொடர்ச்சியாக டொலரின் விலை அதிகரிக்கும் நிலையில் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கின்றமை வழமையான விடயமாக மாறியுள்ளது.
இதற்கமைய ஒரு லிட்டர் டீசல் 75 ரூபாவாலும், ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய பெற்றோலின் புதிய விலை 254 ரூபாவாகவும் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய
விலை 214 ரூபாவாகவும் அமைந்துள்ளது.
கடந்த மாதம் இரண்டு தடவைகள் இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் எரிபொருள் விலையை
அதிகரித்திருந்த நிலையில் மூன்றாவது தடவையாக எரிபொருள் விலையை
அதிகரித்துள்ளது.
இதேவேளை ஒரு கிலோ கோதுமைமாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் 35 ரூபாவினால் அதிகரிப்பதன் காரணமாக, பாணின் விலை உட்பட அனைத்து வெதுப்பக பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வெதுப்பக உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
கோதுமையை விநியோகிக்கும் பிரதான நிறுவனங்கள் இன்று முதல் விலையை ஒரு கிலோ மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளன. இலங்கையில் வெதுப்பக பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் கடுமையான விலை அதிகரிக்கப்பை எதிர்நோக்கியுள்ளன.
இதற்கமைய, 450 கிராம் பாணின் விலை 20 முதல் 30 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் இலங்கையில் வழங்கப்படும் அனைத்து விமான பயணச்சீட்டுக்களின் விலைகளையும் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நாணய மாற்று வீதம் அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானச் சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் வழங்கப்படும் அனைத்து விமானப் பயணச்சீட்டுகளுக்கான கட்டணம் 27 வீதத்தால் அதிகப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, டொலரின் விலை 260 ரூபாவாக நிலையாக இருக்கும் போது இலங்கை அரசாங்கம் வரிக்குறைப்பு அல்லது நிவாரணத்தை வழங்காத பட்சத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்தது 29 ரூபாயால் அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ரூபாவுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால் 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 800 ரூபாய் வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. ஒரு கிலோகிராம் சீனியின் விலை 44 ரூபாயாலும், ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 101 ரூபாயாலும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட் விலையை 300 ரூபாவால் அதிகரிப்பதற்குப் பால் மா இறக்குமதியாளர்களின் சங்கம் ஏற்கனவே தயாராகியுள்ளது. இதற்கமைய, 400 கிராம் எடையுடைய பால் மா பக்கெட் விலை 120 ரூபாவால் அதிகரிக்கும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே, அத்தியாவசியமற்ற பொருட்கள் எனத் தெரிவித்து அப்பிள், திராட்சைப் பழங்கள் உள்ளிட்ட 367 பொருட்களுக்கு இலங்கை அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
