செம்மணி புதைகுழியில் இடம்பெறும் சூழ்ச்சி :புத்தகப்பையை அகற்றுமாறு வந்த உத்தரவு
செம்மணி புதைகுழியில்(chemmani mass graves) நேற்றைய தினம் புத்தக பையொன்று கண்டுபிடிக்கப்பட்டவேளையில் அதனை அங்கிருந்து அகற்றுமாறு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக எங்களுக்கு உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் கிடைத்தன. ஆனால் அங்கிருந்த ஊடக நண்பர் ஒருவர் அதனை உடனடியாக புகைப்படம் எடுத்ததன் காரணத்தினால் அது வெளிவந்திருக்கின்றது. இந்த விடயங்களை மூடிமறைக்க அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டு. ஊடக அமையத்தில் இன்று (30) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் நேற்றில் இருந்து சில விடயங்கள் நடைபெற்றுவருகின்றது. இதனை தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டிய தேவையிருக்கின்றது. செம்மணியில் தொடர்ந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 33 பேரின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த மனித எச்சங்கள் அதிகரித்துச் செல்லுமானால் சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் அவற்றினை முன்னெடுப்பதில் இருந்து தவறி வருகின்றது. இதனை சர்வதேசத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
33 பேரின் எச்சங்கள் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் அதனை பாதுகாப்பதற்கு கூடாரங்களோ அல்லது பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. புதைகுழியில் கண்டுபிடிக்கும் அடையாளங்களை பாதுகாப்பதற்கான கூடாரங்களை அமைத்தால் மாத்திரமே அவற்றினை பாதுகாக்க முடியும். மழை பெய்யுமானால் அவற்றிற்கு பாதிப்புகள் ஏற்படும். டிஎன்ஏ பரிசோதனைகள் செய்யப்படும் போது சில கஷ்டங்கள் ஏற்படும். எனவே, இவை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவிடயங்கள் காணொளியில்..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
