ஜியோவின் அடுத்த மாபெரும் பாய்ச்சல்! உலகத் தர வரிசையில் இணைந்த அம்பானி
தொலைத்தொடர்பு, செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பத் துறைகளில், நம்பகமான மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்குவதற்காக டிரஸ்டட் டெக் அலையன்ஸ் (Trusted Tech Alliance) எனும் புதிய சர்வதேசக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட், கூகுள் கிளவுட், எரிக்சன், நோக்கியா மற்றும் ஆன்த்ரோபிக் உள்ளிட்ட உலகின் முன்னணி 15 நிறுவனங்கள் இணைந்துள்ள இந்தக் கூட்டமைப்பில், இந்தியாவின் முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனமும் ஓர் அங்கமாகியுள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் தனிநபர் தரவு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய 5 அடிப்படை விதிகளைப் பின்பற்ற இந்தக் கூட்டமைப்பில் இணைந்துள்ள நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
மென்பொருள்கள்
கிளவுட் சேவைகள் முதல் மென்பொருள்கள் வரை அனைத்திலும் பயனர்களின் நம்பிக்கையைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த ஒத்துழைப்பு, உலக அளவில் எண்ம பொருளாதாரத்தைப் பாதுகாப்பான முறையில் வளர்க்க ஊக்கமளிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் தலைமைச் செயல் அதிகாரி கிரண் தாமஸ் தெரிவிக்கையில், உலகளாவிய எண்ம வளர்ச்சி அனைவரையும் சென்றடையப் பாதுகாப்பான தொழில்நுட்பம் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த தலைமுறை இணைய வசதி மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களில் மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டச் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதில் ஜியோ பெருமிதம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த முன்னெடுப்பு, உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |