கோடிக்கணக்கான பணத்துடன் சிக்கிய காவல்துறை அதிகாரி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு
மாத்தறை (Matara) - தேவேந்திரமுனை பகுதியில் சுமார் 3 கோடி ரூபா பணத்துடன் கைதுசெய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் உட்பட ஐந்து சந்தேகநபர்களையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (17) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் சோதனை பணிகளில் ஈடுபட்டிருந்த தேவேந்திரமுனை காவல்துறை விசேட அதிரடிப்படையினர், சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த மகிழுந்தொன்றை நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பணம் மற்றும் நகை
இதன்போது, அதிலிருந்து 3 கோடியே 28 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தையும், 150 கிராம் தங்க நகைகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

அதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளில், மகிழுந்தைச் செலுத்திய நபர் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த பணம் வெளிநாட்டில் வசிக்கும் தமது சகோதரியிடமிருந்து பெறப்பட்டதாகச் சந்தேகநபரான கான்ஸ்டபிள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
தடுப்புக் காவல்
எனினும், விசாரணைகளின் போது அளிக்கப்பட்ட வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதால் அவர்கள் மேலதிக விசாரணைக்காகக் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், நேற்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து அவர்களை விசாரிப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்