ஈஸ்டர் தாக்குதல்கள்...காற்றிலே பறந்த அநுரவின் வாக்குறுதிகள் : பகிரங்கப்படுத்திய எம்.பி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பல வாக்குறுதிகளை வழங்கியுள்ள நிலையில் அந்த வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது? என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள (Colombo) ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அலுவலகத்தில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ” உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளர்கள் எவரும் கிராமங்களுக்குச் செல்லவில்லை. மாறாக அவர்களுக்கு பதிலாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரசாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.
ஆட்சி அமைத்த ஜனாதிபதிகள்
ஆனால் நாம் அவ்வாறல்ல. மக்களுடன் இருப்பவர்களை வேட்பாளர்களாகக் களமிறக்கி அவர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் எமது ஆட்சி காலத்தில் இடம்பெற்ற போதிலும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்குமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்சவும் (Gotabaya Rajapaksa) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடிப்படையாகக் கொண்டே ஆட்சியமைத்தார். தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவும் இதனை அடிப்படையாகக் கொண்டு பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றார்.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith) கூட அவற்றை நம்பினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்காகவே பிள்ளையான் (Pillayan) கைது செய்யப்பட்டதாக நாம் எண்ணினோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம்
ஆனால் அவர் அதற்காக கைது செய்யப்படவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. அவ்வாறெனில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது?
வாய் வார்த்தைகளால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க முடியாது. எனவே அதனை நடைமுறையில் செயற்படுத்த வேண்டும்.
ஜே.வி.பி. மிகச் சிறிய கட்சியாக இருந்த போதிலும், ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாட்டில் வன்முறைகளைத் தூண்டி ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி அவ்வாறானதல்ல. அது பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
