காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவோம் : யாழில் உறுதியளித்த அநுர
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவதற்கு நாங்கள் இயலுமானவரை முயற்சிக்கின்றோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
யாழில் (Jaffna) நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”அரசாங்கத்திடம், காவல்துறையினரிடம் , இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட உங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்துவோம். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் தேடிப்பார்க்க வேண்டும். அதுதான் பொறுப்புள்ள அரசாங்கம்.
சாதாரணமாக ஒருவர் இறந்தால் அவருக்காக அழுது, அவருக்கு செய்ய வேண்டிய கிரியைகளை செய்து சில காலத்தில் ஆறுதல் அடைவோம்.
ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியாமல் படும் வேதனைகளை நான் நன்கு அறிவேன்.
எனது சகோதரர் கூட காணாமல் ஆக்கப்பட்டவரே. அதனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலி எனக்கு புரியும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை நாங்கள் சொல்லுவோம். எமக்கு அமைதி தேவை. அதற்காக அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டறிந்து வெளிப்படுத்துவோம்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
