தென்னைமரவாடி மக்களுக்கு தொடரும் அநீதி
கண்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியும் போர் முடிந்துவிட்டது என்று கூறிவிட்டு நமது கவனம் வேறு பக்கங்களில் இருக்க, வடக்கு கிழக்கின் எல்லைப் பகுதிகளில் நிலத்தை ஆக்கிரமிக்கும் உரிமையை மறுக்கும் போர் நடந்துகொண்டே இருக்கிறது.
அப்படித்தான் அண்மையில் இரு அத்துமீறல்கள் வடக்கு கிழக்கில் நடந்திருக்கிறது.
இலங்கையின் அடுத்த ஆட்சி யாருக்கு என்றும் அதிகாரத்திற்கான அரசியல் ஆட்டங்கள் துவங்கப்படும் சூழலிலும் கூட தமிழர் தேசம்மீதான வழக்கான ஒடுக்குமுறைகள் மாத்திரம் இயல்பாக நடந்துகொண்டிருக்கிறது.
யார் ஆண்டாலும், யார் இனி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் தேசம் மீதான ஒடுக்குமுறைகள் நீங்காமல் தொடரும் என்பதை சிறிலங்கா தேசம் மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
வெடுக்குநாறியில் அத்துமீறல்
அண்மையில் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்திற்கு பௌத்த பிக்குமாரை இராணுவத்தினர் தமது உழவு இயந்திரங்களில் அழைத்துச் சென்ற செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருந்தன.
வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள தொல்லியல் திணைக்களமும் பௌத்த பிக்குமாரும் பேரினவாதத் தலைவர்களும் தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் அங்கு ஆலய விக்கிரகங்கள் காணாமல் ஆக்கப்பட்ட கொடூரங்களும் இடம்பெற்றன.
இந்த நிலையில் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் நிலை இலங்கையில் மாத்திரமின்றி தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் கவலையையும் கவனத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், நீதிமன்றம் வரைச் சென்று, வழக்கு தொடுத்து, அங்கு தமிழ் மக்கள் தமது வழிபாட்டுரிமையைப் பெற்றிருந்தினர்.
கடந்த சில மாதங்களாகவே அங்கு மக்கள் அமைதியாக வழிபாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் மீண்டும் அப் பகுதியில் பௌத்த சிங்கள பேரினவாத்தின் அச்சுறுத்தல் திரும்பியுள்ளது.
இராணுவத்தினரால் உழவு இயந்திரத்தில் அழைத்துச் செல்லப்பட்ட பௌத்த பிக்குமார், வெடுக்குநாறி மலை தமது பூர்வீகமான இடம் என்று மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி சர்ச்சையை உருவாக்கியுள்ளனர்.
இதேவேளை, பௌத்த சிங்களமயமாக்கலுக்குப் பின்னால் இராணுவத்தினரே உள்ளனர் என்பதும் வெடுக்குநாறி மலைக்கு பௌத்த பிக்குமாரை அழைத்துச் சென்றமையின் ஊடாக மீண்டும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கந்தசாமி மலை முருகன் ஆயலத்திலும் அச்சுறுத்தல்
இதேவேளை கிழக்கு மாகாணத்தின் எல்லைப் பகுதியான திருகோணமலையின் தென்னைமரவாடி பகுதி முல்லைத்தீவின் எல்லைப் பகுதியான கொக்கிளாயை அண்மித்துள்ளது.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் இதயப் பகுதியாக விளங்கும் இக் கிராமத்தில் கந்தசாமி மலை முருகன் ஆலயம் பன்னெடுங்காலமாக உள்ளது.
அங்கு பௌர்ணமி தினமன்று மாதம் தோறும் பொங்கல் வழிபாடு செய்வது மக்களின் மரபாகவும் பண்பாடாகவும் தொடர்கின்றது.
இந்த நிலையில் அண்மையில் அவ் ஆலயத்திற்கு பொங்கல் விழா சென்ற வேளையில் புல்மோட்டைப் காவல்துறையினர் நீதிமன்ற தடையுத்தரவைக் காட்டி பொங்கல் விழாவை நடாத்தாமல் தடுத்துள்ளனர்.
வழக்கம்போல பொங்கல் நிகழ்வை நடாத்த தென்னைமரவாடி மக்களும் திருகோணமலையின் பல பகுதிகளையும் சார்ந்த மக்களும் கோயிலடிக்கு திரண்டுள்ளனர்.
பொங்கலுக்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்த சமயத்தில் திடீரென நுழைந்த நூறுக்கணக்கான காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடி படையினர், இராணுவத்தினர், புலணாய்வாளர்கள் கலகம் அடக்கும் ஆயுதங்களுடன் வருகை தந்து அப்பிரதேசத்திலிருந்த கிராம மக்களையும் வெளி பிரதேசத்திலிருந்து வருகை தந்த மக்களையும் காரணமின்றி தடுத்து வைத்தனர்.
இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர், காலம் காலமாக தாம் மேற்கொண்டு வரும் பண்பாட்டு நிகழ்வுக்கு வழிபாட்டு உரிமைக்கு தடை விதித்தமை கண்டு மக்கள் கவலையுற்றனர்.
பௌத்த இடமெனக் கதை
திருகோணமலை நீதவான் நீதிமன்றில் தென்னமராவடி கந்தசாமி மலை முருகன் கோவில் அமைந்துள்ள பிரதேசம் சங்கமலை புராதன விகாரைக்குரிய இடமான தொல்லியல் பிரதேசம் என்பதால் அப்பகுதிக்குள் உள்நுழைந்து இந்துமத வழிபாடுகளில் ஈடுபடுவது மற்றும் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுவது ஆர்ப்பாட்டம் ஏற்படக்கூடிய வகையில் செயற்பாடுகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை தடுக்குமாறு கோரி புல்மோட்டை காவல்துறையினர் திருகோணமலை நீதவான் மன்றில் செய்த விண்ணப்பத்துக்கு ஏற்றவகையில் நீதிமன்றம் மேற்குறித்தவாறு தடை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இடத்தில் காவல்துறையினரின் தரப்பு கருத்தை மாத்திரம் கொண்டு மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டமையே மக்களின் கவலைக்கு காரணமாகும்.
இதேவேளை அவ்வாறு சிறிலங்கா காவல்துறையினரால் பெறப்பட்ட அந்த தடையுத்தரவில் அப் பகுதியை சேர்ந்த மக்களுக்கும் பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ள தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தென்னைமரவாடி பகுதியைச் சேர்ந்த நான்கு தமிழ் மக்களின் பெயர் குறிப்பிட்டதுடன் அகம் அமைப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் ஆகிய அனைவரும் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை 106 (01) (3) பிரிவின் கீழ் இந்த தடையுத்தரவு செல்லுபடியாகும் என காவல்துறையினர் தடையுத்தரவை வழங்கினர்.
இத்தகைய செயற்பாடு பொங்கல் நிகழ்வுக்கு வந்த தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்தது.
தென்னைமரவாடி என்ற பூர்வீக கிராமம்
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கிறது தென்னைமரவாடிக்கிராமம். கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் இணையும் இடத்தில் உள்ள இந்தக் கிராமத்தின் மறுபுறத்தில் கொக்கிளாய் காணப்படுகிறது.
கொக்கிளாய் நீரேரியும் பறையானாறும் வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்றன. இவைகளின் கரையோரமாக தென்னைமரவாடிக்கிராமம் இருக்கின்றது.
தென்னவன் என்ற தமிழ் அரசன் இந்தக் கிராமத்தை ஆண்டதினால் தென்னவன் மரபு வந்த அடி என்பதனால் தென்னைமரவாடி என்ற பெயர் இந்தக் கிராமத்திற்கு ஏற்பட்டிருக்கிறது, காலம் காலமாக இந்தக் கிராமத்தில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இதுநீண்ட நெடிய வரலாறு கொண்ட ஒரு பூர்வீகக் கிராமம். முன்னொரு காலத்தில் மக்கள் மகிழ்வும் வளமும் கொண்டதொரு வாழ்வை வாழ்ந்து வந்தார்கள். இக்கிராமத்தின் ஒரு பகுதி மணலாறுடன் தொடர்புபடுகின்றது.
மணலாற்றுப் பகுதிகளில் சிங்களக்குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்த சிங்களக்காடையர்கள் 1983 மார்கழி 3ஆம் திகதி அன்று இந்தக் கிராமத்தினுள் நுழைந்து இனக்கவலரவங்களை நிகழ்த்தினார்கள்.
14பேர் அந்தக் கவலரத்தில் கொல்லப்பட்டார்கள். மூன்று பெண்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டார்கள், பலர் கடத்திச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார்கள், ஈழப் பிரச்சினையில் முதலில் முதனில் இடம்பெயர்ந்த ஒரு கிராமம்தான் தென்னைமரவாடி.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 26 February, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.