சபையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டிய எம்.பி
பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் பாலியல் சித்திரவதைகள் இருக்கவில்லை என மலையகமக்கள் முன்னணி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள் அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த திருத்தச் சட்ட மூலங்களுக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவோம்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமை
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதால் குடும்பமே இல்லாமல் போகிறது. இவ்வாறான நிலைமையில் இதற்காக உரிய சட்டங்கள் அவசியமாகும்.

இதனால் இந்த சட்டமூலத்தின் நோக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது. கடந்த காலங்களில் நாட்டில் பல்வேறு கொலைகள் நடந்துள்ளன.
இதில் அதிகமானவை போதைப் பொருளுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றது. இது தொடர்பில் அதிகபட்ச தண்டனையை வழங்கி இதனை கட்டுப் படுத்த வேண்டும் என்பதே எங்களின் கருத்தாக உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குன்ற வைப்பது போதைப்பொருள் விநியோகமும் போதைப்பொருள் பாவனையும் பிரதான பங்கு வகிக்கிறது.
ஜனாதிபதி நடவடிக்கை
வடக்கு மற்றும் கிழக்கை எடுத்துக்கொண்டால் பிரபாகரன் இருந்த காலத்தில் அங்கு போதைப்பொருள் பாவனையோ துஷ்பிரயோகங்களோ இருந்ததே இல்லை.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக காணப்படுகிறது.சட்டம் ஒழுங்கு முறையாக செயற்படாமையால் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளது.
மலையகத்திலும் இப்போது அவ்வாறான நிலைமையே உள்ளது. எவ்வாறாயினும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
இது பாராட்டத்தக்க விடயமே. ஆனால் இந்த அரசாங்கம் வந்த பின்னரே தினமும் எங்கேயாவது கொலை நடக்கும் நிலைமை காணப்படுகின்றது.
பாதாளக்குழுக்கள்
இவ்வாறான கொலை சம்பவங்கள் நிறுத்தப்படவேண்டும். போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளே இந்த கொலைகளுக்கு காரணமாக இருக்கின்றன.
இதனால் இதனை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். போதைப்பொருள் பாவனை மற்றும் பாதாளக்குழுக்கள் தொடர்புப்பட்டதாக காணப்படுகிறது.

இதனால் முழு நாடும் இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் தான் கொலைகள் பாலியல் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன.
இஸ்லாமிய நாடுகளில் போதைப்பொருள், பாலியல் சித்திரவதைகள் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
அந்த சட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |