ஒட்டுக்குழுக்களின் அரசியல்! ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது கடும் விமர்சனம்
மக்களுக்கு முதுகில் குத்துகின்ற அரசியலை ஒருபோதும் செய்யப்போவதில்லை என்றும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது இலங்கை தமிழரசு கட்சியை அழிக்க வந்த ஒட்டுக்குழுக்கள் எனவும், தமிழரசு கட்சியின் உறுப்பினர் சி.லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பாதீட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த பாதீடு தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையில் தயாரிக்கப்பட்டது என விமர்சனங்கள் வலுத்துள்ளன.
தமிழரசு கட்சி உறுப்பினர்
இந்த வரவு செலவுத்திட்டத்தினை தோற்கடிக்க வேண்டும் என தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனநாயக தமிழ்தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் கட்சியின் மேல் மட்டத்தில் இருந்து பணிக்கப்பட்டுள்ளதாக திட்டமிடப்பட்ட நிலையில் தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் ஆதரவாக வாக்களித்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சபை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

எனினும், இது தொடர்பில் கருத்த வெளியிட்டுள்ள சி.லோகேஸ்வரன்
“இலங்கை தமிழரசு கட்சி இந்த பாதீட்டிற்கு எதிராக வாக்களிக்க வற்புறுத்தியதாக சிலர் சொல்கிறார்கள்.
அவ்வாறு எந்த நிர்ப்பந்தங்களையும் இலங்கை தமிழரசு கட்சி என் மீது திணிக்கவில்லை. எழுத்துமூல ஆவணங்களையோ என்னிடம் அனுப்பிவைக்கவில்லை.
நான் தவிசாளராக பதவி வகித்த காலத்தில், 25.11.2025க்கு முன்னர் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக இருந்தபோது 13 வட்டாரங்களிலும் 21 உறுப்பினர்களின் முன்மொழிவுகள் மற்றும் மக்களின் சந்திப்புக்கள் ஊடாகவே என்னுடைய தலைமையில் இந்த பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தயாரிக்கப்பட்ட பாதீட்டிற்கு எதிராக நான் வாக்களிப்பது என்பது மக்கள் நலனுக்கு முரணான விடயம்.
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குள் இருக்கக்கூடிய மக்களின் நலன்தான் எனக்கு முக்கியம். எந்தவிதமான அழுத்தங்களுக்கும் அடிபணிய வேண்டிய தேவை இல்லை. சம பங்கின் அடிப்படையில் வட்டாரங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முகநூல் விமர்சனங்கள்
இது தேசிய மக்கள் சக்தியின் பாதீடு என சிலர் உருவாக்க நினைப்பது மக்கள் நலனுக்கு எதிரானது. கட்சி வரையறைகளுக்கு அப்பால் மக்கள் நலன். எனக்கு வாக்களித்த மக்களுக்கு நான் விசுவாசமாக இருக்க விரும்புகின்றேன்.

எனது தலைமையில் தயாரிக்கப்பட்ட பாதீட்டினை நான் எதிர்ப்பது என்பது என்னுடைய மக்களுக்கு முதுகில் குத்துகின்ற அரசியல்.
அந்த கீழ்த்தரமான அரசியலை நான் செய்யவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சி எந்த வேளையிலும் பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க வலியுறுத்தவில்லை என்பதை மிகத்தெளிவாக சொல்கின்றேன். இதற்கு பின்னால் பல சதிகள் இருக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கட்சி சார்ந்து தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடிய ஒரு சிலரின் அழுத்தங்களின் நிமித்தம் என்மீது முகநூலில் தேவையற்ற விதத்தில் வதந்திகளை விமர்சனங்களை பரப்பியுள்ளார்கள்.
முகநூல் விமர்சனங்களை வைத்துக்கொண்டு ஒரு கட்சி நடவடிக்கைக்கு போகுமாக இருந்தால் இந்த மாவட்டத்தில் எங்கள் கட்சி சார்ந்தவர்கள் மீது பல முகநூலில் பல விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். அவையும் விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இதனை விட இலங்கை தமிழரசுக் கட்சி ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் ஒன்று செய்துவிட்டதாவும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை தமிழரசு கட்சியுடன் இணைந்து அண்மையில் நடைபெற்ற தவிசாளர் தெரிவின் போது ஆட்சி அமைப்பதாக அவர்கள் பேசி இருந்தார்கள்.
ஆனால் அவ்வாறு இரு கட்சிகளுக்கும் இடையில் எட்டப்பட்ட தீர்மானத்தினை எவ்வாறு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீறியது.
வாக்குறுதி
இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதாக யாழ்ப்பாணத்தில் வாக்குறுதியினை வழங்கிவிட்டு கரைதுறைப்பற்றில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய கட்சி சார்பில் ஒரு தவிசாளர் போட்டிக்கு வேட்பாளரை களம் இறக்கி இருப்பதென்பது இரண்டு கட்சிகளுக்குள்ளும் இடையிலான முரண் நிலையை காட்டுகின்றது.
கரைதுறைப்பற்றில் இலங்கைத் தமிழரசு கட்சியினை அழிப்பதில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முனைப்பாக நிக்கின்றது. அவர்கள் ஒட்டுக்குழுக்கள் என்பதுதான் உண்மை.

அடுத்த தேர்தலை இலக்காக வைத்து ஒரு தேர்தலில் பிரிந்து கேட்பதும் இன்னெரு தேர்தலில் ஒன்றாவது எல்லாம் மக்கள் நலனுக்கு முரணான விடயம்.
எனவே கடந்த தவிசாளர் தேர்வில் தேசியமக்கள் சக்தி அரியாசனை ஏறுவதற்கு அடிப்படையாக இருந்தது.
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கொடுத்த வாக்குறுதியை தான்தோன்றித்தனமாக மீறி அவர்களும் இரகசிய வாக்கெடுப்பிற்கு கோரி தன்னுடைய வேட்பாளரை களமிறக்கியதன் விளைவுதான் கரைதுறைப்பற்றில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சதி மூலம்தான் ஆட்சிமாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |