சர்ச்சைக்குரிய அமைச்சர்களின் சொத்துக்கள் - குற்றச்சாட்டுகளுக்கு அரசின் பதில்
தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து கேள்விகளை எழுப்புபவர்களில் பலர் உண்மையில் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை மறைப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழித்துக் கட்டுவோம் என்று ஆட்சியேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து தற்போது பல்வேறு பட்ட குற்றச்சாட்டுக்கள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வெளியிட்ட சொத்து விபரங்களின் படி அமைச்சர் வசந்த சமரசிங்க சொத்துக்களாக வணிக கட்டடங்கள் - 235,000,000 ரூபாய், காணி மற்றும் வீடுகள் - 10,000,000 ரூபாய், சூரிய மின்கல கட்டமைப்பு - 6,500,000 ரூபாய், தங்கநகைகள் - 4,550,000 ரூபாய் உள்ளன.
சொத்து விபர அறிக்கை
அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்டுள்ள சொத்து விபரங்களின் அடிப்படையில் அவர் எவ்வாறு அவற்றை சம்பாதித்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி, சொத்து விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெருந்தொகை சொத்துக்களை அவர் எவ்வாறு உழைத்தார் என்பதை அம்பலப்படுத்தப்பட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், அமைச்சர் வசந்த சமரசிங்கவின் 270 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் பல அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
