கொரோனா தொற்றின் மூன்றாவது அலை! இதுவரை 606 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், மூன்றாவது அலையில் இதுவரை இதுவரை 606 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நேற்று வெளியிட்ட 32 பேரின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையுடன் சேர்த்து இந்தப் புதிய எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.
இதேவேளை, கொரோனா முதலாவது அலையில் 13 பேர் வரை உயிரிழந்தனர். இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலையில் இதுவரை 1210 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 567 பேர் 70 வயதைக் கடந்தவர்கள். 61 தொடக்கம் 70 வயதினிடையே 321 பேரும், 51 தொடக்கம் 60 வயதிடையே 171 பேரும் உள்ளனர் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, 41 முதல் 50 வயதிடையே 87 பேரும், 31 முதல் 40 வயதிடையே 34 பேரும் இதுவரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 10 வயது முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 15 பேரும், 9 வயதுக்கு குறைவான இருவரும் கொரோனா தொற்றில் இதுவரை உயிரிழந்தவர்களின் பட்டியலில் அடங்குகின்றனர்.
இந்நிலையில் மூன்றாவது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் பொது மக்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.