வட மாகாணத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு
வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 2 612 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகியதுடன், 71 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 74 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 865 பேரும் வவுனியா மாவட்டத்தில் 703 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 654 பேரும் மன்னார் மாவட்டத்தில் 273 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 117 பேரும் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் 44 பேரும் வவுனியா மாவட்டத்தில் 14 பேரும் கிளிநொச்சியில் 9 பேரும் முல்லைத்தீவில் 4 பேரும் என 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் 2020 மார்ச் மாதம் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 833 பேர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 294 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் , இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 512,798 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 541,073 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,743ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.